களம் காணும் மறவர்
விடுதலையின் விலைதானே மரணம்.
விடுகதையா தினம்போட்டு மகிழ
ஒடுக்கிவைத்து தடுப்பாரை தகர்க்கும்
ஓய்வறியா நெடுந்தூரப் பயணம்
கெடுப்பதற்கு இரண்டகத்தார் இழைக்கும்
கெடுமதியை முறியடித்து ஒடுக்கும்;
தடுக்கமின்றி தமிழீழம் அமைய
நமக்கான களம் காணும் மறவர்.
பொழுதெல்லாம் பொருளீட்டிக் கிடந்தால்
பொருளற்று தவித்திடுவாய் மனிதா?
பழுதற்ற குமுகாயம் படைக்க
பகுத்தறிவு நெறிமுறையில் சுழல்வாய்
எழுத்தொன்றி வரும்நிலையில் படிக்க
எண்ணத்தின் பொருள்பதியும் சுவட்டில்
முழுதாக மனிதத்தை பரப்பும்
முகவரியில் மனம் கலப்போம் மகிழ்ந்து.
உலகமயம் வலைவீசிப் பிடிக்கும்
உரிமைகளை களையெடுத்து எறியும்!
நிலமனைத்தும் பறிப்போகும் முறையால்
நிதமிங்கு கலவரம்தான் வெடிக்கும்;
பலமிழந்து குரலெழுப்பி உறங்கும்
பகல்கனவில் விடுதலையா கிடைக்கும்!
நலம்குன்றி பலம்தேடும் மனிதா
நம் கையேதான் ஆயுதமென் றறிவாய்;
திரைப்படத்து சுருளென்று கருதி
திருப்புமுனை அரசியலில் தொடர;
விரைந்துவரும் அரிதாரக் கலைஞன்
வில்லங்கம் புரிவதற்கு இடமா?
நுரைத்துவரும் கடல்நீராய் அசைந்து
நுழைகின்ற நாயகனின் செயலில்
வரைமுறையை அறியாத இளைஞர்
வழிமாறிப்போவதற்கோ இயக்கம்?
வயலும் வயல் சார்ந்த இடமும்
தண்டலை மயில்கள் சாக
தாமரைக் குளங்கள் காய
கொண்டலும் பயிர்கள் வாழக்
கொடுத்தநீர் குறைந்து போக
வண்டிகள் சுமக்க வாரி
வழங்கிய வயல்கள் இன்று
அண்டிய உழவன் வீட்டு
அடுப்புபோல் காய்ந்த தம்மா!
கயலினம் சுமந்த ஓடை
கழிவுநீர் சுமக்க லாச்சு
வயல்களில் மேய்ந்த மாடு
வண்டியில் ஏற லாச்சு
கரைமரம் நிறைந்த ஏரி
கட்டிட மனைகள் ஆச்சு
உரைதிணை மருதம் இங்கு
உருத்தெரி யாமல் போச்சு!
நெற்களம் மட்டைப் பந்தின்
நேர்திடல் ஆன திங்கே
புற்களைச் சுமந்த பூமி
புதுப்புது நோய்க்குள் ளானாள்
சொற்களால் பெருமை யன்றி
சோகமே உழவன் சொத்து
தற்கொலை மூன்று போகம்
தவறாமல் விளையு தம்மா!
விலங்குகள் பறவை மற்றும்
விரிபுவி உயிர்கள் எல்லாம்
தொலைந்துதான் போன தன்றி
தோற்றது உழவர் வாழ்வும்
மலர்ந்திடும் அணு ஒப் பந்தம்
மாறிடும் நூறு ஆட்சி
உலர்ந்திடும் மருதம் கண்டு
உணர்ச்சி நீ கொள்வாய் தோழா!
குருதி உடுத்தி விடுதலை
குருதி உடுத்தி வலம் வருகிறாள்
விடுதலை!
வீரர் வீராங்கனையர் நெற்றியில் முத்தமிட்டு….
ஒற்றைச் சூரியனாய்க் கீழ்வானில்
முகம் உயர்த்தி
வெற்றிச் சுடரொளியில் தமிழீழ
முகம் மலர்த்தி (குருதி உடுத்தி)
கொத்திச்செல்வேன் எனக்
கொக்கரிக்கும் ராஜபட்சி
நீள் சிறகு துணிக்க
நெடுவானில் வாள் உயர்த்தும்
தோழர்களுக்குத் தமிழ்மாலை சூட,
காலவெளியில் ரத்தகானம்பாட (குருதி உடுத்தி)
துயிலும் மாவீரர் தொட்டில்களைத் தாலாட்ட
உயிரின் கனலில் விடுதலை ஒளிவார்த்து
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விரியும் ஒரு தீயாய்,
வீரர் வீராங்கனையர் மார்பூட்டும்
ஒரு தாயாய் (குருதி உடுத்தி)
விரல் துடைக்கும்
நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை,
விழிபொசுக்கும்
உடன்பிறந்த துரோகத்தின் காடுகளை
நுரைசிவக்கும் கடல் அலையே!
மறுகரைக்குச் சொல்க
நொறுங்காது தமிழீழம்
புலிப்படைதான் வெல்லும்! (குருதி உடுத்தி)
மவுனம் சுமக்கும் பறவைகள்
குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
நான்கு வழிப் பயணத்துக்காக,
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும்
விரட்டி அடித்தாயிற்று.
நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்தும்
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அப்பாவி மக்களை
அப்புறப்படுத்தியாயிற்று.
பச்சை வயல்களில்
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில்
தலைவர்களிடையே
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று.
பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில்
அகதிகளாக்கியாயிற்று.
மரங்களை இழந்த பறவைகளும்
தங்களது மொழியினை மறந்தபடி
பறந்து கொண்டிருக்கின்றது
மவுனத்தைச் சுமந்தபடி.
பெருநகர்
அண்ட சராசரங்கள்
அனைத்தையும் ஆள்பவராயிருப்பினும்
கடவுளின் சொந்த ராஜ்யமல்லவா,
சொந்த வீடல்லவா,
இந்தப் பூமி?
பைம்புனல்
பசுந்தருச் சோலைகளின் தணுப்பு
அவரது அண்மை.
ஒரு பெருநகரம்
அவரது அண்மையை மட்டும்
உதறாதிருப்பின்
எத்தனை மொழி பேசும்
எத்தனை இனத்தவராயினும் என்ன,
அது இசைந்து வாழ்கிறது.
அவர் இருக்கும் இடத்தில் மதங்களில்லை
இனங்களில்லை ஜாதிகளில்லை
ஏற்றத் தாழ்வுகளில்லை
வறுமை இல்லை
சண்டை சச்சரவுகளில்லை
போர்கள் இல்லை.
போர்களில்லாத சண்டை சச்சரவுகளில்லாத
வறுமையில்லாத ஏற்றத்தாழ்வுகளில்லாத
ஜாதிகளில்லாத
இனங்களில்லாத மதங்களில்லாத இடத்தில்
அவர் இருக்கிறார்.
அத்தனை இலட்சம் மக்களை
நெருக்கி அணைத்துக் கொண்டிருக்கும்
அந்தக் கற்பனைப் பெருநகர்
ஒரு சிறு கிரீச்சிடலுமின்றி
இறையாட்சியின் நிறைவாழ்வில்
திளைத்துக் கொண்டிருக்கிறது என்றால்
அன்பர்களே, அதன் காரணம்
சிலமும் ஒழுக்கமும் மாத்திரமே அல்லவா?
ஒற்றையடிப் பாதை
புற்களுக்கு நடுவில்
அழகாய் நீண்டுச் சென்றிருக்கும்.
அதன் உருவகம் ஆச்சரியம்
தருபவையாகவே இருந்தது
கால்நடைகளும் கால்தடங்களும்
பூமியில் ரேகையிட்டு வைத்ததோ
என்று கூட எண்ணியிருக்கின்றேன்
ஊரைவிட்டு விலகி பிரதான பாதையிலிருந்து
கிளைத்து ஒரு நதியை போலவே
பயணித்து எல்லைகளை பிணைத்திருக்கும்
விபரம் அறியதுவங்கிய வயதுக்கு முன்
அதனுடன் சினேகம் இருந்தது
சைக்கிள் டயரை உருட்டி செல்வது
வாத்தியாருக்கு பயந்து தூரத்து
புளியமரத்தில் தஞ்சம்புகச் செல்வது
சக நண்பனுடன் சுற்றி திரிவது என்று
என் பால்யத்தின் தடங்கள் அப்பாதையில்
பதிந்து கிடந்தது.
அப்பாவிற்கு இன்னும் நெருக்கமாக
இருந்தது அப்பாவின் வேலைகளை
சுலபமாக்கவும் சாத்தியப்படுத்தவும்
இதுவே அதிகம் உதவியிருக்கும்
எப்போதும் அப்பாதைமண் அப்பாவின்
வெடித்த பாத இடுக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
தாமதமாக வீடுதிரும்பும் ஆடுகளை கூட
இதுதான் அழைத்து வரும்
ஒற்றையடிப்பாதையை போலவே
பால்யத்தின் நினைவுகள்
மனவெளியில் நீண்டக் கோடாய்
பதிந்து கிடக்கின்றது அதன் வழியில்
சென்றால் திரும்பவும் பால்யத்திற்கே
சென்றுவிடுவோமா என்ற ஏக்கத்துடன்
அதன்றுகில் சாய்ந்த நாற்காலியில்
ஆடிக்கொண்டிருக்கின்றது கழிந்து
போன அகவைகள்.
பின்பற்றுதலையும் ஒன்றுபடுதலையும்
உணர்த்தியபடி புத்தனைபோலவே
மௌனமாய் உறைந்து கிடந்த
அப்பாதை இன்று இல்லை
“”"பெரிய”" நிறுவனங்கள் மணலுக்காக”
காடுகளையெல்லாம் வாங்கிக்கொண்ட
பின் ஒற்றையடிப்பாதையின்
தேவை நின்று போய் அழிந்து போனதாக
அப்பா சொன்னார்
பால்யத்தின் இளந்தடங்கள்
பதிந்து கிடந்த அந்த ஒற்றையடிப்பாதையை
மூடியபடி சென்றிருந்த கருத்த
தார்சாலையை பார்க்கையில்
நீண்டக் கல்லறையை போலவே தோற்றமளித்தது எனக்கு.
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்
காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,
நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு
கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.
தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.
இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.
பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.
ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?
மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?
இடப்பெயர்ச்சி
ஆடு மாடு மேய்த்துக்
கிடைபோட்ட மேய்ச்சல்
நிலங்கள்.
அடுப்பெறிக்க விறகு ஒடித்த
கருவேலங்காட்டு
புறம்போக்கு நிலங்கள்
ஆங்கிலேயன்
அடிமை வர்க்கத்திற்குத்
தந்துவிட்டுப் போன
பஞ்சமி நிலங்கள்
உழுது பயிரிட்டு
உண்டு வாழ்ந்த
நன்செய் நிலங்கள்
அனைத்தையும்
அபகரித்துக் கொண்டு
அந்நிய முதலாளித்துவம்
விளக்கம் சொன்னது
இது
கிராமத்தானை
நகரத்தானாக மாற்றும்
திட்டம் என்று.
உண்மைதான்
கிராமத்தான்
நகரத்தான் ஆனான்
மாநகரத்து நடைபாதையில்
உள்நாட்டு அகதிகளாக.
